Thursday, June 30, 2011

சனத் ஜெயசூர்யா: தோற்றுப்போன சாதனையாளன்!




சனத் ஜெயசூர்யாவின் 42வது பிறந்த தினம் இன்று. 2 நாட்களுக்கு முன்னர் வரை இலங்கை அணிக்காக சர்வதேச கிரிக்கட் ஆடியவர். இலங்கை அணி, 1996ஆம் ஆண்டு கிரிக்கட் உலகக் கிண்ணம் பெற முக்கிய காரணமாய் அமைந்தவர். மாத்தறை மாவட்டத்திலிருந்து அதிக விருப்பு வாக்குகள் பெற்ற அரச தரப்பு பாராளுமன்ற உறுப்பினர். இப்படி பல அறிமுகங்களுக்கு சொந்தக்காரர் சனத்!

இலங்கை கிரிக்கட் வரலாற்றை முரளியும்- சனத்தும் இன்றி எழுதிவிட முடியாது. அதிக பக்கங்களை இவர்கள் இருவருமே எடுத்துக்கொள்வார்கள். கடந்த வருடம் இதே காலப்பகுதியில் முரளி டெஸ்ட் போட்டிகளிலிருந்து 800 விக்கட்டுக்கள் பெற்று ஓய்வுபெற்றிருந்தார். சனத்தும் தன்னுடைய 22 வருட சர்வதேச கிரிக்கட் வாழ்க்கையை விருப்பமின்றி நேற்றுமுன்தினம் முடித்துக்கொண்டார் அல்லது முடித்துக்கொள்ள அறிவுத்தப்பட்டார்.

ஒரு பொக்ஷிங்டேயில், அதாவது 1989 டிசம்பர் 26ஆம் திகதி அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக தன்னுடைய சர்வதேச கிரிக்கட்டை 20 வயது சனத் ஜெயசூர்யா ஆரம்பிக்கிறார். அந்தப் போட்டியில் 3 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்கிறார். இலங்கை அணி 30 ஓட்டங்களினால் தோற்றுப்போகிறது. அப்போது, யாரும் நினைக்கவில்லை சனத் கிரிக்கட்டின் பலதுறைகளிலும் சாதனைகளை தன்னகத்தே கொண்டுவரப்போகிறார் என்று!

ஒருநாள் கிரிக்கட்டின் ஆரம்ப அதிரடி ஆட்டத்தை இந்திய அணியின் முன்னாள் வீரரும், தற்போதைய தேர்வுக்குழு தலைவருமான சிறிகாந்த் ஆரம்பித்து வைத்தார். ஆனாலும், அதனை பலமடங்கு உயர்த்திக்காட்டி பலரையும் தன்னுடைய ஆட்ட தன்மையை பின்தொடர வைத்த பெருமை சனத்துக்கு உண்டு. அதுவும், களுவிதாரண என்கிற சக வீரருடன் அவரின் ஆரம்ப துடுப்பாட்டம் கிளாசிக் ரகம்.

என்னுடைய அறிவுக்கு எட்டிய வரையில் 22 வருடங்கள் சர்வதேச கிரிக்கட் ஆடியவர்கள் சனத்தும்- சச்சினும் மட்டுமே. சச்சின் இன்னும் 2 ஆண்டுகளாவது சர்வதேச கிரிக்கட்டில் நிலைத்திருப்பார் என்று நினைக்கிறேன். இவர்கள் இருவரிலும், ஒருநாள் ஆட்டங்களில் ‘மச் வின்னர்’ என்ற சொல்லுக்கு சச்சினைவிட, சனத்தே பொருத்தமானவர். ஓட்டங்கள்- விக்கட்டுக்கள் என்று தொடர்ந்தும் சகலதுறை வீரராக வலம் வந்தவர். டெஸ்ட் ஆட்டங்களில் சச்சினை, சனத்தினால் எந்தக்காலத்திலும் நெருங்கக்கூட முடியவில்லை.

இப்படி, இலங்கை அணியினை பல தருணங்களில் தனியொரு வீரராக தோளில் சுமந்த சனத் ஜெயசூர்யா இறுதி 4- 5 வருடங்களில் நடந்து கொண்ட விதம், அவரின் சாதனைகளை மறக்க வைத்துவிட்டது. 42 வயதான சனத் ஜெயசூர்யா ஆரம்ப வீரராக ஆடுகிறார். அதே அணியில் 21 வயது டினேஸ் சந்திமால் உதிரி வீரராக ஆட்டத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

‘கனவான்’ வீரர்கள் தங்களுடைய ஆட்டத்திறன் ஓரளவு குறைகின்றது என்று தெரிகிறபோதே ஓய்வுபெற்று இளம் வீரர்களுக்கு வழிவிடுவதே அவர்களுக்கும்- அணிக்கும் நல்லது. அதனைவிடுத்து, ஓய்வுபெற மாட்டேன் என்று அடம்பிடிப்பது புதிய வீரரொருவருக்கான இடத்தை பிடித்துக்கொண்டிருப்பதாகவே அர்த்தப்படும். அதனையே, சனத் இறுதி 5 வருடங்களில் செய்து கொண்டிருந்தார். இதனால், பலர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

உள்ளூர் ஆட்டங்களில் சிறப்பாக தொடர்ந்தும் செயற்பட்ட ஜீவன் மென்டிஸ் தன்னுடைய சர்வதேச கிரிக்கட் அறிமுகத்தை 28 வயதில் மேற்கொள்ள வேண்டிய நிலையெல்லாம், சில சிரேஸ்ட வீரர்களின் அடம்பிடிப்புக்களினாலும் நிகழ்கிறது. இது சின்ன உதாரணம் மட்டுமே. சர்வதேச போட்டிகளில் ஆடுவதற்கு இளம் வீரர்களுக்கு அனுபவம் அவசியமாகிறது. அதனைப்புரிந்து கொண்டு சிரேஸ்ட வீரர்கள் செயற்படுவதும் முக்கியமானது. ஆனால், அதனை சனத் அதிக தருணங்களில் நிறைவேற்றவில்லை.

டெஸ்ட் ஆட்டங்களிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த அவர், மீண்டும் டெஸ்ட் போட்டிகளில் ஆடியது வரலாறு. அதுபோல, 15 மாதங்களுக்கும் அதிக காலம் சர்வதேச போட்டிகள் எதிலும் ஆடாத அவர், அரசியலுக்கு சென்ற தருணத்திலாவது சர்வதேச கிரிக்கட்டிலிருந்து ஒதுங்கியிருக்கவேண்டும். அதனையும் செய்யாமல், மீண்டுமொரு சர்வதேசப் போட்டியிலேயே ஓய்வுபெறும் அறிவிப்பை வெளியிடுவேன் என்று அடம்பிடிப்பது ஒரு சாதனை வீரனுக்கு அழகல்லவே.

இலங்கையில் மட்டுமல்ல கிரிக்கட் விளையாடப்படும் அனைத்து நாடுகளிலும் சனத்தின் அதிரடி ஆட்டத்தினை பின்பற்றுபவர்கள் பலர் இருக்கின்றனர். கிரிக்கட்டில் ஆர்வமின்றியிருந்த என்னைப் போன்ற ஆயிரக்கணக்கான சிறுவர்களை (1996இல் சிறுவன்) அதன்பக்கம் ஈர்த்த பெருமை அவருக்குண்டு. ஆனால், அவர் இறுதிக் காலங்களில் நடந்து கொண்ட விதம் அவரின் மீதான மரியாதையை குறைக்கவே செய்தது.

சனத் ஜெயசூர்யா அவர்களே….! நீங்கள் சாதனை வீரர்தான். ஆனால், இறுதிக் காலங்களில் தோற்றுப்போய்விட்டீர்கள். எதுஎப்படியோ, குடும்ப வாழ்க்கை சிறக்க வாழ்த்துக்கள். ஏனெனில், அரசியலில் உங்களினால் நிலைத்து நிற்க முடியாது என்று நம்புகிறேன்!!

No comments:

Post a Comment