Thursday, June 30, 2011

விதியின் ஊஞ்சல்

விழிகளுக்கும் இமைகளுக்கும்
மத்தியில்
விதியின் ஊஞ்சல்...
இமைக்கும் நொடிக்குள் நூறுமுறை
ஆடி ஓய்கிறது

எதிர்பார்க்கை நூலில்
எழுந்து உயரும் பட்டம்,
அறுக்கப்பட்ட நூலோடு
நிர்வாணமாய்..

சாளரங்கள் திறந்தும்
சாலைகள் மூடப்பட்டும்;
எலிகளின் ஆட்சிக்கு மட்டுமாய்
சோபனை தெருக்கள்

வெடிகுண்டுகளோடு வரவேட்பறைகள்
வேர்களை இழந்த வேதாந்தங்கள்
சுண்டிவிடப்படும் பக்கத்துக்கு
சரிந்து விழும் சித்தாந்தங்கள்

இதழ்களில் சிரித்து
இருதயத்தில் நாண் ஏற்றும்
செயற்கை மானுடம்

களவெடுப்பவனுக்கு காலாண்டு சிறை
கண்ணீர் விடுபவனுக்கு ஆயுள் தண்டனை
கால்போன இடமெல்லாம்
காற்றுவாங்கப் போகும் சட்டங்கள்

சமுதாய சந்தையில் பொதுநலம் விற்று
சுயநலம் வாங்க வேண்டும்
தொழிலில் தேர்ந்தவர்  சொன்னார்
"பொதுநலத்தை விட சுயநலத்துக்கு
கிராக்கி " இருக்கிறதாம்!

No comments:

Post a Comment